

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியில் அமைந்துள்ள ஆரோவில்லின் மேம்பாடு மற்றும் நிர்வாகத்திற்காக இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆரோவில் நிர்வாகக் குழுவுக்கு, தமிழக கவர்னர் தலைவராக செயல்படுகிறார்.
புதுச்சேரி கவர்னர் முக்கிய உறுப்பினராக இடம் பெற்றுள்ளார். ஆரோவில் நிர்வாகக்குழு தலைவராக உள்ள தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத அர்லேகர், தனது மனைவி அனகாவுடன் ஆரோவில் வந்தார். மாத்ரி மந்திரை பார்வையிட்டார்.
அதையடுத்து ஆரோவில் வாசிகள், ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் மற்றும் முக்கிய பணிக்குழுக்களுடன் சந்திப்பு நடத்தினார். ஆரோவில் வாசிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத அர்லேகர் பேசியதாவது:-
இந்தியாவின் பழமையான ‘வசுதைவ குடும்பகம்' உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற தத்துவம் முக்கியமானது. இங்கே நாம் ஆரியர் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. ஆரியர் என்பது ஒரு இனம் அல்ல, ஆரியர் என்பது இந்த நாட்டு மக்களின் ஒரு குணம். மக்களிடையே உள்ள இந்த நற்குணம் உலகில் உள்ள மனிதர்களை சென்றடைய வேண்டும். இது உலகத்தை மகிழ்வுக்கு உள்ளாக்கும்.
அடுத்த 100 ஆண்டுகளில் இந்தியா இந்த முழு உலகிற்கும் வழிகாட்டும் என்று அரவிந்தர் கணித்திருந்தார், அவருடைய கணிப்பு இப்போது உண்மையாகி வருகிறது. முழு உலகமும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்மை நாமே அழித்து கொள்வதற்கும், நமது பழக்க வழக்கங்கள், நமது மாபெரும் கலாசாரம், சனாதன பரம்பரை ஆகியவற்றை அழிப்பதற்குமே மெக்காலே திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் நமது எண்ணங்கள் வழி நடத்தப்பட்டன.
நமது கலாசாரத்துடன் கலந்திருக்க வேண்டிய கல்வியே நமக்குக் கற்பிக்கப்படவில்லை, ஆனால் அது இப்போது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. காலனித்துவ மனப்பான்மைகளை விடுத்து, பண்பாடு சார்ந்த உண்மையான கல்வியை நோக்கி இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக விஸ்வ குருவாக மாறி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, புதுச்சேரி கவர்னரின் செயலர் மணிகண்டன், ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு பணி அதிகாரி சீதாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.