அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட ஏனாமில் நிவாரண பணிகள் தீவிரம்

60 குடிசை வீடுகள் சேதமாகி இடிந்து விழுந்தன.
அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட ஏனாமில் நிவாரண பணிகள் தீவிரம்
Published on: 
Summary

தீயணைப்புத்துறை, பொதுப்பணிதுறை மற்றும் மின்துறை ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைத்து வருகின்றனர்.

ஆந்திரா மற்றும் ஏனாமை தாக்கிய அர்னாப் புயலின் போது கனமழையோடு மணிக்கு 125 கி.மீ. முதல் 150 கி.மீ வரை பலத்த காற்று வீசியது.

சேதம்

பெரிய மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்ததால் உள்கட்டமைப்பு பெரும் சேதம் அடைந்துள்ளது. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணிதுறை

தீயணைப்புத்துறை, பொதுப்பணிதுறை மற்றும் மின்துறை ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைத்து வருகின்றனர். பெரும் பாலான வழிகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும் புயல் ஏனாமை புரட்டி போட்டது. இதில் முதல் கட்ட சேத குறித்து விபரம் வெளியாகி உள்ளது.

முதற்கட்ட சேத மதிப்பீட்டு அறிக்கையை பிராந்திய நிர்வாகி சிவராஜ் மீனா, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

101 ஹெக்டேர் பயிர் சேதம்

100 சதவீதம் நெற்பயிர் அதாவது 101 ஹெக்டேர் பயிர் முழுமையாக சேதம். 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், 500 மரங்கள் சாய்ந்தன. சுமார் 25 கால்நடை கொட்டகைகள் சேதம். 35-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் கம்பங்கள், 25 குறைந்த அழுத்த மின் கம்பங்கள் சாய்ந்தன. 2 மின்மாற்றிகள் மற்றும் 15 கி.மீ நீள மின் கம்பிகள் சேதம். கிரியம் பேட்டா, சாவித்திரி நகர், தரியலாதிப்பா தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் கடந்த 27-ந் தேதி மாலை 4 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இதுவரை வழங்கப்படவில்லை. 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

60 வீடுகள்சேதம்

சுமார் 60 குடிசை வீடுகள் சேதமாகி இடிந்து விழுந்தன. 500-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் விழுந்துள்ளன. அரசு கட்டிடங்கள், சுற்றுச் சுவர்கள் சேதம். மீனவர்களின் பல படகுகள் சேதம், ஆனால் பலத்த காற்று காரணமாக சேதமடைந்த படகுகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியவில்லை.

சில சாலை உள்கட்டமைப்புகள் மழையால் பாதிப்பு. செல்போன் இணைப்பு பகுதியாகவும், இணைய இணைப்பு முழுமையாகவும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

ஏனாமில் வேரோடு சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்கிறது. சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றி மீண்டும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெள்ளம் மற்றும் காற்றில் அடித்து வரப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. முகாம்களில் தங்கியுள்ளோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

X