புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வாக்குகள் நாளை எண்ணிக்கை- காலை 10 மணிக்கே முடிவு தெரிந்து விடும்

ஓட்டுபதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வாக்குகள் நாளை எண்ணிக்கை- காலை 10 மணிக்கே முடிவு தெரிந்து விடும்
தட்டாஞ்சாவடி
Published on: 
Summary

தட்டாஞ்சாவடி தொகுதியில் பெறும் வெற்றி தோல்வியால் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா ஆட்சிக்கு பாதிப்பு இல்லை என்றாலும் தேர்தல் முடிவு மக்களின் மனோநிலையை பிரதிபலிக்கும் என்பதால் வருங்கால அரசியல் தீர்மானிக்கப்படும். இதனால் ஆளும், எதிர்கட்சியினர் தேர்தல் முடிவை எதிர்பார்த்து உள்ளனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் விநாயகம், தி.மு.க., சேது செல்வம், இந்திய கம்யூ., சலீம் உட்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

80.81 சதவீதம் வாக்குகள் பதிவு

நேற்று முன்தினம் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில் 10,056 ஆண் வாக்காளர்கள், 11,695 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 21,756 பேர் ஓட்டளித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலின் போது தட்டாஞ்சாவடி தொகுதியில் 87.10 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 80.81 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை விட 6.29 சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளது.

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

ஓட்டுபதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு மோதிலால் நேரு பாலிடெக்னிக் மையத்தில் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அடுத்து மின்னணு ஓட்டு பதிவு எந்திரங்கள் 4 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.

2 மணி நேரத்தில் முடிவுகள் தெரிந்து விடும்

முதல் சுற்றில் 8, 2-ம் சுற்றில் 8, 3-ம் சுற்றில் 8 என முதல் 3 சுற்றுகளில் 24 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். மீதமுள்ள 7 ஓட்டுச் சாவடிகளில் பதிவான ஓட்டுகள் 4-ம் சுற்றில் இறுதியாக எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய 2 மணி நேரத்திலேயே அதாவது காலை 10 மணிக்கு யார் முன்னணியில் இருக்கிறார் என்ற முதல் கட்ட நிலவரம் தெரியும்.

அதனைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கை வேகமெடுத்து காலை 12 மணிக்கு முழு முடிவும் தெரியும். முன்னதாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் காலை 7 மணி முதல் அரசியல் கட்சி முகவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். முகவர்களின் அடையாள அட்டை சரிபாக்கப்பட்டு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என போலீசார் அறிவித்து உள்ளனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கையையொட்டி லாஸ்பேட்டை வாக்கு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வெற்றி ஊர்வலத்தில் மோதல்களை தவிர்க்க தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதோடு லாஸ்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட உள்ளனர்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் பெறும் வெற்றி தோல்வியால் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா ஆட்சிக்கு பாதிப்பு இல்லை என்றாலும் தேர்தல் முடிவு மக்களின் மனோநிலையை பிரதிபலிக்கும் என்பதால் வருங்கால அரசியல் தீர்மானிக்கப்படும். இதனால் ஆளும், எதிர்கட்சியினர் தேர்தல் முடிவை எதிர்பார்த்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com