தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.1000 கருணைத்தொகை: கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல்

1447 தற்காலிகப் பணியாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
புதுச்சேரி
புதுச்சேரி
Published on: 

புதுவை அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களுக்கு தீபாவளி மற்றும் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலா ரூ.1000-ம் கருணைத் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கவர்னர் ஒப்புதல்

முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் கேபினெட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதலுடன் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன்படி பள்ளி கல்வித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகளில் பணியாற்றும் மொத்தம் ஆயிரத்து 447 தற்காலிகப் பணியாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

பள்ளி கல்வித்துறையில், பால் காய்ச்சுவோர் 708 பேர், முச்சக்கர வண்டிப் பணியாளர்கள் 125, போக்குவரத்து பணியாளர்கள் 44 பேர் என மொத்தம் 877 தற்காலிகப் பணியாளர்கள் பயனடைவர்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் 340 ஆஷா பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 55 பேர் என 395 பேர் இந்த கருணை தொகையை பெறுகின்றனர்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் பணியாற்றும் 105 அங்கன்வாடி கவுரவப் பணியாளர்கள், 70 அங்கன்வாடி கவுரவ உதவியாளர்கள் என 175 பேர் பயனடைவர். இதற்கான செலவினங்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் தற்போதைய பட்ஜெட்டில் திட்ட ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை நிதித்துறையின் ஒப்புதலோடு பணியாளர் துறை சார்பு செயலாளர் முருகேசன் பிறப்பித்துள்ளார்.

X