புதுச்சேரியில் முகம் சிதைந்து கிடந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம்- பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்

தமிழ்செல்வனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து தமிழ்செல்வனை யாரோ கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டினர்.
புதுச்சேரியில் முகம் சிதைந்து கிடந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம்- பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்
Published on: 
Summary

தமிழ்ச்செல்வனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் தமிழ்செல்வன் விபத்தில் இறந்ததற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி வாணரப்பேட்டை ரோடியர்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன் (வயது30). இவருக்கு சுயம்பு என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி, பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வருகிறார்.

கொலை செய்யப்பட்டதாக புகார்

தமிழ்ச்செல்வன் தற்காலிகமாக உப்பளம் நேதாஜி நகரில் மாமனார் வீட்டில் தனது குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த 2-ந் தேதி இரவு 10 மணியளவில் தமிழ்ச் செல்வன், நேதாஜி நகரில் இருந்து கல்லறை வீதி வழியாக பைக்கில் சென்றார். திடீரென அவர், முகத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த தமிழ்செல்வனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து தமிழ்செல்வனை யாரோ கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டினர்.

இதையடுத்து முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

கொலை செய்யப்பட்டது போல் முகம் சிதைந்து இருந்ததால், கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தமிழ்ச்செல்வனுக்கு பல்வேறு சம்பவங்களில் பலருடன் பிரச்சினைகள் ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததால், உறவினர்கள், நண்பர்கள், எதிரிகள் என பலரையும் பிடித்து விசாரித்தனர். சுமார் 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் 500-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி.காட்சிகளை ஆய்வு செய்தும் எந்த துப்பும் துலங்காமல் இருந்தது.

விபத்தில் பலி

இதற்கிடையே, தமிழ்ச்செல்வனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் தமிழ்செல்வன் விபத்தில் இறந்ததற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில் தமிழ்செல்வன் விபத்தில் இறந்தது உறுதியானது. சம்பவத்தன்று இரவு வாணரப்பேட்டையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த தமிழ்ச் செல்வன் அதிவேகத்தில் பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார்.

முகத்தை கிழித்தது

அப்போது எதிர் பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தபோது எதிரே ஒரு தம்பதி வந்த பைக் மீது விழுந்துள்ளார். இதில் பைக்கின் முன்சக்கரத்தில் உள்ள டிஸ்க் பிரேக் உள்ளிட்ட உதிரிபாகங்கள் உடைந்து தமிழ்ச்செல்வனின் முகத்தை கிழித்துச் சென்று இறந்தது தெரியவந்துள்ளது. ஒருசில நொடிக்குள் இவ்விபத்து நடந்து முடிந்துள்ளது.

பயத்தின் காரணமாக பைக்கில் வந்த அந்த தம்பதி முதலில் கூறவில்லை. பின்னர் அந்த பைக்கில் வந்த தம்பதியை போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அதன்பிறகே அவர்கள் விபத்து நடந்ததை ஒப்புக் கொண்டனர்.

பைக் பறிமுதல்

இதையடுத்து அவர்கள் வந்த பைக்கை போலீசார் கைப்பற்றினர். சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு மேலாகியும் துப்பு துலங்காமல் இழுபறி நீடித்து வந்த நிலையில், இப்போது விபத்தில் இறந்தது உறுதியானதால் முதலியார்பேட்டை போலீசார் நிம்மதி அடைந்தனர். முழு விசாரணைக்குப் பிறகு இவ்வழக்கை போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

X