

வார இறுதி விடுமுறை நாளையொட்டி புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடற்கரை அழகை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் மற்றும் அதே சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்த போவதாக தகவல் பரவியது.
இதையடுத்து கடற்கரை சாலையை போலீசார் அடைத்து சீல் வைத்தனர்.
சுமார் 1 ½ கி.மீ. முழுவதும் சீல் வைக்கப்பட்டது. இந்த சாலையில் காலை, மாலை, இரவு ஆகிய நேரங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழியும். கடற்கரை சாலையில் நடைபயணம் செல்வோர் அதிகம். இந்த சாலை சீல் வைக்கப்பட்டதால் மக்களின் நடமாட்டத்துக்கு முற்றிலும் தடை ஏற்பட்டது.
கடற்கரை சாலையில் திரண்டிருந்த கூட்டத்தினரையும் போலீசார் வெளியேற்றினர். வார இறுதி விடுமுறை நாளையொட்டி புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடற்கரை அழகை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.