நாயை ஆஸ்பத்திரியில் அனுமதிக்காத கால்நடை டாக்டருக்கு கொலை மிரட்டல்- 4 பேர் மீது வழக்கு

பணியில் இருந்த டாக்டர் முகமது தவ்பிக் நாயின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது, பாம்பு கடி இல்லை என்றும் உண்ணி காய்ச்சல் மற்றும் ரத்தசோனை வியாதி இருப்பது தெரிய வந்தது.
வழக்கு பதிவு
Published on: 
Summary

புதுச்சேரி கால்நடை டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாம்பு கடியால் பாதிக்கப்பட்டதாக கூறிய நாயை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுத்ததால், டாக்டருக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட் பகுதியை சேர்ந்தவர் முகமது தவ்பிக் (வயது27). தனியார் கால்நடை ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்

சம்பவத்தன்று இரவு வில்லியனூர் அருகே தமிழக பகுதியான கண்டமங்கலத்தை சேர்ந்த வெங்கடராமன், அவரது தம்பி வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் விஜய், சதீஷ் ஆகியோர் நாயை பாம்பு கடித்து விட்டதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்குமாறு தனியார் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

அங்கு பணியில் இருந்த டாக்டர் முகமது தவ்பிக் நாயின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது, பாம்பு கடி இல்லை என்றும் உண்ணி காய்ச்சல் மற்றும் ரத்தசோனை வியாதி இருப்பது தெரிய வந்தது.

கொலை மிரட்டல்

இதையடுத்து முகமது தவ்பிக் இதுகுறித்து வெங்கட் ராமனிடம் தெரிவித்து நாயை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். ஆனால் வெங்கட்ராமன் நாயை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவில்லை என்றால் வெட்டிக்கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்து, அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுகுறித்து முகமது தவ்பிக் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வெங்கடராமன், வினோத் குமார், விஜய், சதீஷ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com