காரைக்கால்: வயதான தந்தையை கவனித்துக்கொள்ளாத 3 மகன்களுக்கு சிறைதண்டனை விதிப்பு!

மகன்கள் 3 பேரையும் கைது செய்ய தற்போதைய மாவட்ட துணை ஆட்சியரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான பூஜா உத்தரவிட்டார்.
காரைக்கால்: வயதான தந்தையை கவனித்துக்கொள்ளாத 3 மகன்களுக்கு சிறைதண்டனை விதிப்பு!
Published on

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிப் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 84). இவரது மனைவி இறந்த நிலையில், மகன்கள் வரதராஜன், திருமுருகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் திருப்பட்டினம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வயதான காலத்தில் தனக்கு எந்த உதவிகளும் செய்யாமல், தன்னை தவிக்க விடுவதாக தனது 3 மகன்கள் மீது கடந்த 2018ம் ஆண்டு காரைக்கால் சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் முனுசாமி.

அப்போது இந்த மனுவை விசாரித்த காரைக்கால் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ், மூன்று மகன்களும் தந்தைக்கு மாதந்தோறும் தலா ரூ.2000 கொடுக்கவேண்டும் எனவும், தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

நீதிமன்றத்தில் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட மூவரும் பின்னால் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் இடம் மேல்முறையீடு செய்தனர். மாவட்ட ஆட்சியர் இந்த மேல்முறையீட்டை நிராகரிக்க, திருமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்தும் இரண்டாவது முறையாக மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இந்த மனுமீது இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

இதனால் முதியவர் முனுசாமி 2018 முதல் 2026 வரை 71 மாதங்களாக தனக்கு எந்த ஒரு பராமரிப்பு தொகையும் வழங்கவில்லை என காரைக்கால் சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வர, தந்தைக்கு உதவித் தொகை வழங்காத குற்றத்திற்கும், தீர்ப்பாயம் உத்தரவை அவமதித்த குற்றத்திற்கும் மகன்கள் 3 பேரையும் கைது செய்ய தற்போதைய மாவட்ட துணை ஆட்சியரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான பூஜா உத்தரவிட்டார்.

உத்தரவை தொடர்ந்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி பூஜா முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு மகன்கள் மூவருக்கு ஒரு மாதம் சிறைதண்டனை விதித்த நீதிபதி, முதியவர் குறிப்பிட்டிருந்த முழுத்தொகையையும் வழங்காவிடில் இந்த சிறைத்தண்டனை தொடரும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஐந்து நாட்கள் மூவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட அவர், இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணையை வரும் 9ந் தேதி ஒத்தி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com