

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 93,493 பேர் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர இடமாற்றம், இறப்பு, இரட்டை பதிவுகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டன. மேலும், பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 3,387 பேர் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
இதில் 93,493 பேர் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வரைவு பட்டியலில் இருந்த 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களில், 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 பேர் மட்டுமே தற்போது இடம் பெற்றுள்ளனர்.
நீக்கப்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 467 பேரில், 97,393 பேரின் விவரங்கள் மீண்டும் சரி பார்க்கப்பட்டுள்ளது. இதில் 93,493 பேர் தகுதியற்றவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தகுதியற்றதற்கான காரணங்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தமை, இறப்பு, இருப்பிடத்தில் இல்லாமை, இரட்டை பதிவுகள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றது ஆகியவையாகும்.
மீதமுள்ள 6,072 பேரை சரிபார்க்கும் பணி வருகிற 20-ந் தேதிக்குள் முடிக்கப்படும். இதுவரை 3,387 பேர் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெயர் சேர்க்க 515 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெயர் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய, நாளை (சனிக்கிழமை) அனைத்து வாக்கு சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும். பெயர் சேர்க்க https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமும் விண்ணப்பிக்கலாம். உதவிக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.