ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை: ஐ.பி.எஸ். அதிகாரி மீது மனைவி புகார்- 3 பிரிவுகளில் வழக்கு

அருண்யாவிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தி தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
வழக்கு பதிவு
Published on: 
Summary

ஐ.பி.எஸ். அதிகாரி சுபாஷ் மற்றும் அவரது தாயார் மீது ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக மனைவி அருண்யா புகார் அளித்துள்ளார். 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவம் புதுச்சேரி காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்அருணையை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 39).

ஐ.பி.எஸ். அதிகாரி

புதுச்சேரி காவல்துறையில் ஐ.ஆர்.பி.என். பிரிவில் துணை கமாண்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த அருண்யாவுக்கும் (36) கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் புதுச்சேரி துமாஸ் வீதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்தனர். திருமணத்தின் போது அருண்யா குடும்பத்தினர் வரதட்சணையாக 15 பவுன் நகை தருவதாக கூறியுள்ளனர். ஆனால் 6 பவுன் மட்டுமே வழங்கியதாக கூறப்படுகிறது. மீதமுள்ள நகைகளை பிறகு தருவதாக தெரிவித்துள்ளனர்.

வரதட்சணை கொடுமை

இந்த நிலையில் சுபாஷ், அவரது தாயார் சுலோச்சனா ஆகியோர் அருண்யாவிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தி தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு சுபாஷ், மனைவியை குடும்பம் நடத்த ஏற்கவில்லை.

இது குறித்து அருண்யா புதுச்சேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை நடத்தி போலீஸ் அதிகாரி சுபாஷ், அவரது தாயார் சுலோச்சனா ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

பரபரப்பு

சுபாஷ் பதவி உயர்வு பெற்று தற்போது டெல்லியில் பயிற்சியில் உள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ள சம்பவம் புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com