முதல்-அமைச்சர் ரங்கசாமியை புரோக்கர்கள் ஆட்டி படைக்கின்றனர்- திமுக அமைப்பாளர் சிவா ஆவேசம்

தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதம் கடந்து விட்டது. அரசு ஸ்தம்பித்து போய் உள்ளது. பதவி ஏற்ற 2 அமைச்சர்களுக்கும் இலாகா கொடுக்கவில்லை.
முதல்-அமைச்சர் ரங்கசாமியை புரோக்கர்கள் ஆட்டி படைக்கின்றனர்- திமுக அமைப்பாளர் சிவா ஆவேசம்
Published on

புதுவை திராவிடர் கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளையொட்டி திராவிடர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மறைமலை அடிகள் சாலை சுதேசி மில் அருகே நடந்தது.

கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் சிவா பேசியதாவது:-

புதுவை அரசை மக்கள் உண்மையா விரும்பி தேர்ந்தெடுத்தார்களா?, இந்த அரசு எப்படி வந்தது என்று மக்களுக்கு தெரியும். கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை ஏற்போம் என்று கூறினோம். அதற்கான பலம் எங்களிடம் இருந்தது. 20 சீட் தனியாக நின்றாலே வெற்றி பெறும் நிலை இருந்தது.

ஆனால் கூட்டணியில் காங்கிரஸ் 13 சீட் கொடுத்தது. கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுக்கவில்லை. அடித்துமாயும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறாது என தொடக்கத்திலே மக்கள் முடிவு செய்து விட்டனர். பிறகு திமுக வேட்பாளர்களை எதிர்த்து 6 காங்கிரஸ் வேட்பாளர்களை காங்கிரசார் நிறுத்தினர்.

திமுக வெற்றி பெற கூடாது திமுகவின் கீழ் நாம் ஆட்சியில் இருக்க கூடாது என நினைத்தார்கள். ஆனாலும் காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது. பாஜக ஆட்சி வருவதற்கு ஆர்எஸ்எஸ் கை கூலியாக இருந்து காங்கிரசார் செயல்பட்டு உள்ளார்கள். இன்றைக்கு பாஜக ஆட்சி வந்ததற்கு காங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் 5 தொகுதிகளில் நாங்கள் வென்றுள்ளோம். புதுவை, தமிழகத்தில் அடித்த விசில் தான் வில்லியனூர் தொகுதி தோல்விக்கு காரணம். ரங்கசாமிக்கு மக்கள் ஆட்சி அமைக்க அங்கீகாரம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் சொந்த சொத்தை தனது குழந்தைகளுக்கு பதிவது போல் காத்திருக்கிறார்.

தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதம் கடந்து விட்டது. அரசு ஸ்தம்பித்து போய் உள்ளது. பதவி ஏற்ற 2 அமைச்சர்களுக்கும் இலாகா கொடுக்கவில்லை. மீதமுள்ள 3 அமைச்சர்கள் பதவி ஏற்பார்களா.? இலாகா கொடுப்பார்களா? என தெரியாது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாரும் கேள்வி கேட்காத அரசாக உள்ளது.

எம்.பி தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் - பாஜனதா கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்கள். அதுபோல் சட்டமன்ற தேர்தலில் சந்தித்து இருக்க வேண்டும். நமக்கு நடந்த குழப்பத்தில் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டனர். இவர்கள் எந்த புது திட்டத்தையும் கொண்டு வரபோவதில்லை.

புரோக்கர் கூட்டம் முதல்-அமைச்சரை சுற்றி உள்ளது. 6 பேர் கொண்ட குழு முதல்-அமைச்சரை ஆட்டி படைக்கிறது. முதல்-அமைச்சர் நிவாரண நிதியை அவருடைய தனிசெயலர் ரூ.10 கோடி மோசடி செய்துவிட்டார். அதற்கான லிஸ்ட் உள்ளது. ஊழல் செய்துள்ளவர்கள் யார் என்பது முதல்வருக்கு தெரியும். முதல்-அமைச்சர் நல்லவர்போல் நடிக்காமல் ஏழைகளுக்கு சேர வேண்டிய பணத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்

இவ்வாறு சிவா பேசினார்.

கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் நாஜிம், எம்எல்ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், விக்னேஷ் மற்றும் திமுக, திக, கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com