

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன் மூலம் வாய்க்காலில் பாய்ந்த காரை மீட்டனர்.
புதுச்சேரியில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஆறு, ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் வேகமாக நிரம்பி வருகிறது.
பாகூர் - கன்னியகோவில் சாலையோரத்தில் சித்தேரி வடிகால் வாய்க்காலில் கரை தட்டியவாறு மழை வெள்ளம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னை அண்ணா நகர், மெட்ரோ ஜோன் பிளாட் பகுதியைச் சேர்ந்த சரண் (வயது27) மற்றும் அவருடன் மனோஜ், கீர்த்தி, அபிராமி மற்றும் 4 வயது சிறுமி அகானா ஆகியோர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று விட்டு புறவழிச் சாலை வழியாக காரில் வந்தனர்.
இன்று காலை 6.45 மணி அளவில் புற வழிச்சாலையில் இருந்து புதுச்சேரி வர பாகூர் - கன்னியகோவில் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வாகனம் திடீரென வந்ததால் அதில் மோதாமல் இருக்க இடது புறத்தில் காரை திருப்பிய போது நிலை தடுமாறி கார் வாய்க்காலுக்குள் பாய்ந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் மூழ்கி இருந்த காரின் கதவை திறந்து 5 பேரையும் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன் மூலம் வாய்க்காலில் பாய்ந்த காரை மீட்டனர்.