

சுமார் 1½மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லை, வெறும் புரளி என்பது தெரிய வந்தது. அதன்பிறகே போலீசாரும், தலைமை செயலக ஊழியரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் காரணமாக புதுச்சேரி கடற்கரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக கவர்னர் மாளிகை, முதலமைச்சர் வீடு, கலெக்டர் அலுவலகம், பிரெஞ்சு தூதரகம், சட்டசபை வளாகம், கோர்ட் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு உடனடியாக அழைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கும், காவல்துறை சிக்மா பிரிவு, தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே பெரிய கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தலைமை செயலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றினர். மேலும் கடற்கரை சாலையில் தலைமை செயலகம் அருகே பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டுகள் நல்லாம்பாபு, ரட்சனா சிங் மற்றும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர், நவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தலைமை செயலகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை நடத்தினர்.
சுமார் 1½மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை, வெறும் புரளி என்பது தெரிய வந்தது. அதன்பிறகே போலீசாரும், தலைமை செயலக ஊழியரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் காரணமாக புதுச்சேரி கடற்கரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே போனில் மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.