

டெல்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டில் பங்கேற்ற புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மின்துறை மந்திரியிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் வீட்டு உபயோகம், வணிகம், தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்புப் பணிகள் விரிவடைந்து வருவதால் மின்சார நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலங்களுக்கு இடையேயான மின் கடத்தல் அமைப்பின் கீழ், புதுவைக்கு 540 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2026–-27 நிதி ஆண்டிலேயே புதுவையின் மின் தேவை 588 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. இது ஒதுக்கப்பட்ட அளவை விட 48 மெகாவாட் அதிகமாகும். ஏற்கனவே புதுவைக்கு 540 மெகாவாட்டில் இருந்து 620 மெகாவாட்டாக அதாவது கூடுதலாக 80 மெகாவாட் மின்சாரத்தை உயர்த்தி வழங்க மத்திய மின் கடத்தல் பயன்பாட்டு நிறுவனம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக நாகப்பட்டினம் துணை மின் நிலையத்திலிருந்து புதுவையில் உள்ள 4 துணை மின் நிலையங்களுக்கு 230 கி.வோ., உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் முடிந்து 2028-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தான் அந்தக் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.
இந்த பணிகள் நிறைவடையும் வரை இடைக்கால ஏற்பாடாக, 2027-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் புதுவைக்கு கூடுதலாக 50 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும். இதற்காக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு மூலம் கடந்த அக்டோபர் மாதம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.