

புதுச்சேரியில் இதுவரை டெங்குவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானது.
புதுவையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 1,000-க்குள் இருந்த டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு இதுவரை 300-ஐ தாண்டியது. அதாவது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்த முகமது இர்பான் (வயது 22). முதலில் காய்ச்சல் வந்து கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சை பெற்றார்.
பின்னர் நிலைமை மோசமாகவே ஜிப்மரில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது இந்த ஆண்டின் முதல் டெங்கு மரணம் என்று சுகாதாரத்துறை அறிவித்தது.
புதுச்சேரி மூலக்குளம், பிச்சைவீரன்பேட்டை சேர்ந்த குமரேசன் மகள் ஹரிணி (19). கல்லூரி மாணவியான இவர் காய்ச்சலால் அவதிப்பட்டார் இதனையடுத்து ஹரிணி தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு திடீரென உடல் நிலை கவலைக்கிடமாகி ஹரிணி இறந்தார். ஆனால் ஹரிணி டெங்குவால் இறக்கவில்லை என்று முதலில் சுகாதாரத்துறை மறுத்தது. இது பெரும் சர்ச்சையானது. ஹரிணி இறந்த பிறகு எடுத்த பரிசோதனையில் அவர் இறந்தது டெங்குவால் தான் என உறுதியானது.
அரசு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனை முடிவுகள் சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்ட பிறகு தான் டெங்கு மரணம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனால் புதுச்சேரியில் இதுவரை டெங்குவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானது.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் முருகன் கூறியதாவது:-
மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை கொடுத்திருந்தது. எல் நினோ விளைவு காரணமாக இந்த ஆண்டு டெங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே டெங்கு பரவ தொடங்கி விட்டது. மழை, தேங்கிய தண்ணீர், வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏடிஸ் கொசு உற்பத்தி அதிகமாகி உள்ளது.
புதுச்சேரி மட்டும் இல்லாமல் தென்னிந்தியா முழுவதுமே டெங்கு அதிகமாகி உள்ளது. தென்னிந்தியாவில் டெங்கு அதிகம் இருப்பதாக ராஜ்யசபாவில் மத்திய அமைச்சகமே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்காலிக சபாநாயகரும், அ.தி.மு.க செயலாளருமான அன்பழகன், முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க கொரியும், தேவையான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யவும் மனு கொடுத்துள்ளார்.