

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எழுதி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அருப்புக்கோட்டை நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியை ஆக பணிபுரியும் நிர்மலாதேவி தனது மாணவிகள் சிலருடன் பேசிய தொலைபேசி உரையாடல் அடங்கிய ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவலாக பரிமாறிக் கொள்ளப்பட்டு வந்தது. அந்த ஒலிப்பதிவில் இருந்த விஷயங்கள் தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இத்தகைய நெறிமுறையற்ற செயல்கள் மிகவும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை ஆகும்.
தனது மாணவிகளுடன் நிர்மலா தேவி நடத்திய உரையாடலில் இருந்து இத்தகைய நெறிமுறையற்ற செயல்களுக்கு அப்பாவி இளம்பெண்களை கவர்ந்திழுக்கும் முயற்சி இது முதல் முறையல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் அதிகாரிகளின் காம வேட்கைகளைப் பற்றி ‘மிகுந்த கவனத்துடன்’ அவர் அந்த இளம் பெண்களிடம் பேசியிருக்கும் விதமும், “ஆளுநர் ஒன்றும் கிழவர் அல்ல” என்பது போன்ற தனிப்பட்ட சொல்லாடல்களும் அவர்களின் திட்டங்களை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.
இத்தகைய நடத்தை என்பது தனிப்பட்ட ஒரு நபரின் தவறான நடவடிக்கை என்பதாக கருதிவிட முடியாது. விரும்பத்தகாத, ஊறுவிளைவிக்கும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளில் இளம் பெண்களை கவர்ந்திழுக்க இதுபோன்ற மேலும் பலர் சுற்றிக் கொண்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் தமிழ் நாட்டு மக்களின் மனதில் வலுவாக எழுந்துள்ளது.
மிகப்பெரும் குற்றவாளி கும்பல்களின் வலைப் பின்னல் ஒன்று தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவே தோன்றுகிறது.
இத்தகைய நடவடிக்கைகளில் தற்போதைய ஆளுநர், அவரது அலுவலகம், உயர் கல்வித் துறை, தமிழ்நாட்டின் சில குறிப்பிட்ட பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பலருக்கும் இதில் பங்கிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வலுவான வகையில் எழுந்துள்ளது.
தென்னக மாநிலம் ஒன்றைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர் மீது பாலியல் ரீதியான தவறான செயல்பாடு குறித்த புகார் ஒன்று எழுந்துள்ளதாகவும், அந்தப் புகாரின் மீது மத்திய உள்துறை அமைச்சகம் விசாரித்து வருவதாகவும் சில ஊடகங்களில் ஒரு சில வாரங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாயின.
அதே நேரத்தில், தனக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட அதிகாரங்களின் வரம்பை மீறிய வகையில் அரசுப் பதவிகளுக்கு மிகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பாரபட்சமான முறையிலும் நியமனங்களை செய்து வந்துள்ளதையும் எங்களால் காண முடிந்தது. இவை அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது, வேறு சில ‘பங்களிப்பு’களுக்குப் பிரதிபலனாக ‘தகுதி, திறமை ஆகியவற்றை மீறிய வகையில்’ இத்தகைய நியமனங்கள் அனைத்தும் நடைபெற்றுள்ளன என்ற சந்தேகமும் மக்களின் மனதில் எழுந்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உயர்மட்ட விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
இத்தகைய விசாரணையை முறையாக மேற்கொள்ள உதவும் வகையில் தற்போதுள்ள ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டியது அவசியமாகும்.
நெறிமுறை தவறிய நடவடிக்கைகள் குறித்த புகார்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பின்னணியில், இந்த உரையாடல் குறித்தும், அது தொடர்பான இதர விஷயங்கள் குறித்தும் விசாரிப்பதற்கென சந்தானம், (ஓய்வு) தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் ஒன்றை தற்போதைய ஆளுநர் நியமனம் செய்துள்ளது மிகவும் அதிர்ச்சிகரமான செயலாகும்.
சந்தேகத்திற்கு உரியவரே தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஒரு விசாரணை கமிஷனை நியமித்துள்ளதாகவே பரவலாக கருத்து நிலவுகிறது. எனவே ஆளுநர் நியமித்துள்ள இந்த கமிஷன் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்.
மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற சந்தேகத்திற்கு இடமான, அருவருக்கத்தக்க நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும். ஆளுநரின் அலுவலகமே இத்தகைய சச்சரவில் சிக்கிக் கொண்டுள்ளது என்பதும் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
எனவே குடியரசுத் தலைவர் அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆளுநர் பதவியின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் பெருமையை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.