

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறையில் 9 பேர் உயிரிழந்தனர். இதில் நான்கு விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டனர். இதற்கு அனைத்து கட்சிகளும் கண்டனைங்களை தெரிவித்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா, கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற லக்கிம்பூர் சென்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு ராகுல் காந்தியுடன் லக்கிம்பூர் சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இன்று லக்கிம்பூர் கெரியில் பிரியங்கா காந்தி கூறுகையில் ‘‘நீதி என்பது ஜனநாயகத்தின் உரிமை. நான் அதற்காக தொடர்ந்து போராடுவேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களையும் நான் நேற்றிரவு பார்த்தேன். அப்போது அனைவரும் நீதி வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். நடுநிலையான விசாரணையை உறுதி செய்ய மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.