நாட்டில் ஊழலை ஒழிக்க பிரதமர் மோடியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும்: தமிழக கவர்னர்

நாட்டில் ஊழலை ஒழிக்க பிரதமர் மோடியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதார மேம்பாடு வளர்ச்சி சங்கத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித்
பொருளாதார மேம்பாடு வளர்ச்சி சங்கத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித்
Published on

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், ‘பொருளாதார மேம்பாட்டு சங்கம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தொடக்க விழா, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நடந்தது.

விழாவில் சங்கத்தின் தலைவராக வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், பொதுச்செயலாளராக ‘ஜெம்’ குருப் ஆப் கம்பெனி தலைவர் ஆர்.வீரமணி, துணைத்தலைவராக ‘பி.ஜி.பி. குருப் ஆப் கம்பெனி’ தலைவர் பழனி ஜி.பெரியசாமி, பொருளாளராக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், ஆலோசகராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் ஆகியோர் பொறுப்பு ஏற்றனர்.

விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களுடைய நிதிநிலையை மேம்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பணியாற்றி வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் மாற்றங்கள் வெளிப்படையாக இருக்கின்றன. இதன் மூலம் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.

அரசு நிர்வாகத்தில் ஊழலற்ற தன்மையை கொண்டுவருவதற்கு பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவருடன் நாம் அனைவரும் கைக்கோர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், இந்திய தொழில் கூட்டமைப்பின்(தமிழ்நாடு) தலைவர் ஆர்.ரவிச்சந்திரன், இந்திய வர்த்தக சபை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.விக்ரம், தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்கத்தின் பொதுசெயலாளர் எஸ்.ரங்கநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், ஐசக் பத்மசிங், ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன், சென்னை வர்த்தக சபை தலைவர் சோழ நாச்சியார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com