

தசரா பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் இறுதி நாளில் டெல்லி செங்கோட்டை அருகில் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்தில் ராவண வதம் நடைபெறும். இதையொட்டி அங்கு ராவணனை ராமர் வதம் செய்ததை நினைவூட்டும் வகையில், ராவணனின் உருவ பொம்மைக்கு தீவைத்து எரிப்பது வழக்கம். தீய சக்திகள் அழிந்து நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதை வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான தசரா பண்டிகையின் இதன் நிறைவு விழா இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது.
அங்கு ராமர், லட்சுமணர், அனுமன் உருவங்களில் இருந்தவர்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் திலகமிட்டனர். அதன்பின்னர், அங்கு 80 முதல் 90 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ராவணனின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த ராவண வதம் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய மந்திரிகள் மனோஜ் திவாரி, விஜய் கோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் ராமர் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.