நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.1 அபராதம் செலுத்த பிரசாந்த் பூஷண் ஒப்புதல்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் விதித்த ரூ.1 அபராதம் செலுத்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்
Published on

புதுடெல்லி:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தனது சமூக வலைதளப் பக்கங்களில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடுமையாக விமர்சித்திருந்தார். முந்தைய தலைமை நீதிபதிகளின் செயல்பாடு குறித்தும் டுவிட்டரில் விமர்சித்திருந்தார்.

நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என ஆகஸ்ட் 14ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

பூஷண் தனது பதிவுகளுக்கு வருத்தம் தெரிவிக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் தனது முழு நம்பிக்கை அடிப்படையில் வெளியிட்ட ட்வீட்களுக்கு வருத்தம் தெரிவிப்பது, உண்மையானதாக இருக்காது என பூஷன் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். ஒரு ரூபாய் அபராதத்தை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனை மற்றும் 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக செயல்பட தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், பிரசாந்த் பூஷண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படுகிறேன். எந்தவொரு சட்டப்பூர்வமான தண்டனைக்கும் நான் கட்டுப்படுவேன் என்பதால் மரியாதையுடன் அபராதத்தைச் செலுத்துவேன்.

எனக்கான தண்டனையை மறு சீராய்வு செய்ய கோர எனக்கு உரிமை உள்ளது. உண்மை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த வழக்கு, பேச்சு சுதந்திரத்திற்கு ஒரு முக்கியமான தருணமாக உள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இந்த விஷயத்தில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com