

கோவை:
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் ஜனநாயக மதசார்பற்ற இயக்கங்கள் இணைந்து கோவை மக்கள் மேடை என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.
இதன் தொடக்க நிகழ்ச்சி சிங்காநல்லூர் அருகே வரத ராஜபுரத்தில் நடந்தது. தி.மு.க. கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி.யும் மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி பேசியதாவது:-
பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள், சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகிறார்கள். இந்தியாவில் மத மோதல்களை உருவாக்க பா.ஜனதா முயற்சித்து வருகிறது. ஆனால் அது தமிழகத்திற்குள் வராததற்கு காரணம் பெரியார் செய்த பிரசாரம் தான்.
ஒரு மதத்தில் உள்ள கருத்துகளை விமர்சிக்க உரிமை இல்லையா? ஆனால் அந்த உரிமை யாருக்கும் இல்லை என்ற நிலையை உரு வாக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. மதங்களுக்கிடையே வெறுப்பை உருவாக்கி மோதலை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது. தமிழகத்தில் அத்தகைய வெறுப்பு அரசியலை நாம் அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் இடையே வெறுப்பை ஏற்படுத்தி ஆதாயம் தேட பார்க்கிறார்கள். அ.தி.மு.க. இணைப்பை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முயற்சிக்கிறது. அதற்கு காரணம் 50 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வரும் பெரியார் கொள்கையை இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. தலித் மக்களை தன் வயப்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சித்து வருகிறது. மத்திய அரசின் பாசிச போக்கு தலித்துகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களாகத் தான் இருக்க வேண்டும். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இந்தியர்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜனதா ஆட்சி மூலம் செயல்படுத்த முயற்சிக்கிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. இணைப்பின் மூலம் ஆர்.எஸ். எஸ். மற்றும் பா.ஜனதா தங்களது மதவாத கொள்கைகளை திணிக்க முயற்சிக்கின்றன. அதை தடுத்து நிறுத்த அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அ.தி.மு.க. இணைப்பு தமிழகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
இவ்வாறு அவர் பேசினார்.