மாட்டிறைச்சிக்கு எதிரான சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது: பிரகாஷ் காரத் பேட்டி

மாட்டிறைச்சிக்கு எதிரான சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது: பிரகாஷ் காரத் பேட்டி

மாட்டிறைச்சி தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று பிரகாஷ் காரத் கூறினார்.
Published on

கோவை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் கோவை காந்திபுரத்தில் இன்று நடந்தது. இதில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், குழு உறுப்பினர்கள் வரதராஜன், ரெங்கராஜன் எம்.பி., வாசுகி, சவுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து பிரகாஷ் காரத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவ டிக்கை பொருளாதாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம். இன்னும் வருகிற காலங்களில் அதுபற்றி மக்களுக்கு புரியும்.

மாட்டிறைச்சி தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்த தடையை மத்திய அரசு திரும்ப பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சியினரையும் அழைத்து மத்திய அரசு அதன்படி செயல்பட வேண்டும். ஆளும் கட்சியின் முடிவை பொறுத்து எங்கள் கட்சியின் முடிவு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 3 வருடங்களாக மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மக்களுக்கு விரோதமாக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழக மக்களுக்கு எதிராக புதிய சட்டங்களை அறிவித்து செயல்பட்டு வருகிறது.

தற்போது மத்திய அரசு , கொண்டு வந்துள்ள இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை சட்டம் மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

தமிழக அரசின் ஓராண்டு ஆட்சியில் உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை. சட்டம் -ஒழுங்கு சரியில்லை. தமிழகத்தில் காலுன்ற மத்திய பா.ஜனதா அரசு ரகசிய திட்டம் தீட்டி வருகிறது.

இந்த மாநில குழு கூட்டத்தில் வறட்சி, மற்றும் மாட்டிறைச்சி விவகாரம், மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

100 நாள் வேலை திட்டத்தை ஊராட்சியில் செயல்படுவதை போல் பேரூராட்சியிலும் செயல்படுத்த நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்று கருத்தை மதிக்கும் பண்பு சங் பரிவார், பா.ஜனதா கட்சிகளிடம் இல்லை. சென்னையில் மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்ச்சியில் ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்ட சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com