

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிரிபிரகார மண்டபத்தின் ஒரு பகுதி கடந்த 14-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் திருச்செந்தூரை சேர்ந்த பேச்சியம்மாள் (வயது43) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து இடிந்து விழுந்த கிரிபிரகார மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘பழுதடைந்த கிரிபிரகார மண்டபம் முழுவதையும் இடித்துவிட்டு புதிய மண்டபம் கட்டப்படும்’ என்றார்.
மேலும் இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மண்டபத்தை இடிக்கும் பணியை உடனடியாக தொடங்கவும் அமைச்சர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் கோவிலின் கிரிபிரகார மண்டபத்தை அறநிலையத்துறை பொறியாளர்களும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சுகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவினரும் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து கிரிபிரகார மண்டபத்தை இடிக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கும் என்றும், இதனால் கோவில் பிரகார மண்டபத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
அதன்படி கிரிபிரகார மண்டபம் இடிக்கும் பணி இன்று தொடங்கியது. மண்டபத்தை இடிக்கும் பணி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் கலையரங்கம் முன்பிருந்து தொடங்கப்பட்டது. பிரகார மண்டபத்தின் உயரம் சுமார் 25 அடி உள்ளதால் பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் கிரிபிரகார மண்டபம் இடிக்கப்பட்டது.
இந்த பணியில் அறநிலையத்துறை பொறியாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். பிரகார மண்டபம் இடிக்கும் பணி திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. கணேஷ்குமார், தாசில்தார் அழகர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி ஆகியோர் கண்காணிப்பில் நடந்தது.
மேலும் அப்பகுதியில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாலசந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ரகுராஜன், சிஜா ராணி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவிலை சுற்றியுள்ள கிரிபிரகார மண்டபத்தை முழுவதுமாக இடித்து முடிக்கும் பணி ஒருவாரம் வரை நடக்கும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற தடை விதிக்க கோரி திருச்செந்தூர் முருகன் கோவில் வளாக வியாபாரிகள் சங்கத் தலைவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.