போரூர் மேம்பாலம் அடுத்த வாரம் திறப்பு: எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வலியுறுத்தல்

ஏழு வருடங்களாக கட்டப்பட்ட போரூர் மேம்பாலம் அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளது. இந்த புதிய மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட அமைச்சர் பெஞ்சமின் வலியுறுத்தி உள்ளார்.
போரூர் மேம்பாலம் அடுத்த வாரம் திறப்பு: எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வலியுறுத்தல்
Published on

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் போரூர் ரவுண்டனாவும் ஒன்றாகும். இந்த பகுதியை கடந்து செல்ல குறைந்தது 15 நிமிட நேரமாவது அங்கு காத்து நிற்க வேண்டும்.

இதனால் அங்கு மேம்பாலம் கட்டுவதற்கு தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2010-ம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டு ரூ.34 கோடியில் பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

முதல்கட்ட ஆய்வு முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது சென்னை மாநகருக்கு வரும் குடிநீர் குழாய், அந்த பகுதி வழியாக செல்வதால் பில்லர் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் ஒப்பந்தப்படி பணிகளை நிறைவேற்ற முடியாததால் தி.மு.க. ஆட்சியில் பாலத்தை கட்டி முடிக்க முடியவில்லை. இதனால் கட்டுமான பணிகள் கிடப்பில் கிடந்தன.

அதன் பிறகு 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அப்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூர் மேம்பாலம் தடைபட்டு கிடந்ததை அறிந்து, அதை மீண்டும் கட்டி முடிக்க ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

உடனே அதிகாரிகள் மேம்பாலம் அமையும் பகுதியை பார்வையிட்டு குடிநீர் குழாய்க்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அந்த பகுதியில் தூண்களை அமைக்க டிசைன்களை மாற்றியமைத்து ஆலோசனைகளை வழங்கினார்கள். அதன் அடிப்படையில் பழைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.54 கோடி செலவில் புதிய வடிவமைப்புடன் மேம்பாலம் கட்ட எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கினார். இதைத் தொடர்ந்து மீண்டும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.

பாலம் கட்டுமான பணிகள் பற்றி அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து அதை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

கடந்த மார்ச் மாதத்திலேயே இதை கட்டி முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் பாலப் பணிகள் நடைபெறுவதில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டது.

தற்போது மீண்டும் அந்த பணிகள் வேகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இந்த பாலத்தை அடுத்த வாரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது அவரது சிந்தனையில் உருவாக்கப்பட்ட போரூர் மேம்பாலம் இப்போது முதல்-அமைச்சராக உள்ள அவரது கையால் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

போரூர் மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என்று அமைச்சர் பெஞ்சமின், திருத்தணி அரி எம்.பி., அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை கழகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com