

நெகமம்:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் அறுவடை செய்யும் நெல்லின் புத்தரிசியை புது பானையிலிட்டு பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழ்வர்.
இதையொட்டி நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆவலப்பம்பட்டி, கரப்பாடி, கொல்லபட்டி, பூசாரிபட்டி, புளியம்பட்டி, அய்யம்பாளையம், செட்டியக்காபாளையம், கப்பிணிபாளையம், ஆண்டிபாளையம், ஆகிய பகுதிகளில் மண் பானைகள் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
கோதவாடி குளம் மற்றும் அருகில் உள்ள குளங்களில் களிமண், செம்மண் போன்றவைகளை வாகனங்கள் மூலம் கொண்டு வந்து வெயிலில் நன்கு காய வைத்து பின்பு தண்ணீர் ஊற்றி, ஊறவைத்து கால்களால் மிதித்து கைகளில் பிசைந்து மண் பாண்டங்கள் தயாரிக்கப்படுகிறது.
தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பொங்கல் பானை மற்றும் பல்வேறு வகையான பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தயாரிக்கப்பட்ட பானைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு தயார் படுத்தி வருகின்றனர்.
மேலும் மண்பானை தயாரிப்பு தொழிலாளர்கள் பொங்கல் பானைகள், தண்ணீர் பானைகள், குழம்பு சட்டிகள், பூந்தொட்டிகள், உருவார பொம்மைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மண்பாண்ட தொழிலாளி ஒருவர் கூறியதாவது;
நாங்கள் தயாரிக்கும் பானைகள் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், திருப்பூர், நெகமம், பல்லடம், சூலூர், செஞ்சேரிமலை, மற்றும் கேரளாவில் ஒருசில பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் மண்பாண்ட வியாபாரிகள் மொத்தமாக வந்து விலைக்கு வாங்கி சென்று விடுவார்கள். பானைக்கு ஏற்ற அளவு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.