செப்டம்பர் மாதம் 390 போலீசார் நியமனம் - நாராயணசாமி தகவல்

வருகிற செப்டம்பர் மாதம் 390 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
நாராயணசாமி
நாராயணசாமி
Published on

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

சாமிநாதன் (பா.ஜனதா):- புதுவை வேலை வாய்ப்பகத்தில் எத்தனை பேர் பதிந்துள்ளனர். கடந்த 30 ஆண்டில் எத்தனைபேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது?

அமைச்சர் கந்தசாமி:- புதுவை மாநிலத்தில் இதுநாள் வரை வேலைவாய்ப்பகத்தில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 191 பேர் பதிவு செய்துள்ளனர். புதுவை அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் 6 ஆயிரத்து 395 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சாமிநாதன்:- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் 50 வயதை கடந்து அவரின் மகனும் பதிவு செய்து விட்டார். இன்னும் அவருக்கு வேலைவாய்ப்பு தரவில்லை. ஆனால் உங்கள் தேர்தல் அறிக்கையில் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை என அறிவித்தீர்கள்.

கந்தசாமி:- பிரதமர் மோடி கூடத்தான் 2 கோடி பேருக்கு வேலை என அறிவித்தார். ஆனால், வேலை கொடுத்துவிட்டாரா?

சாமிநாதன்:- தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்படும் என அறிவித்தீர்கள். இதுவரை பூங்காவை தொடங்கவில்லை. இதை தொடங்கியிருந்தால் வேலை கிடைத்திருக்கும். அரசு மூலம்தான் வேலை கிடைக்க வேண்டும் என்றில்லை, தனியார் மூலம் வேலை கொடுக்கலாமே?

கந்தசாமி:- மத்திய அரசு ரூ.500, ரூ.ஆயிரம் தடை செய்தது. ஜி.எஸ்.டி. வரி போட்டது. இதனால் பல தொழிற்சாலைகளை மூடிவிட்டனர். பல கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.

சங்கர் (பா.ஜனதா):- 30 ஆண்டில் 6 ஆயிரம் பேருக்குத்தான் வேலை கொடுத்துள்ளீர்கள். இந்த கணக்கீட்டின்படி பார்த்தால் தற்போது பதிவு செய்துள்ள 2 லட்சம் பேருக்கு வேலை வழங்க 590 ஆண்டுகளாகும்.

கந்தசாமி:- அப்படி பார்த்தால் மத்திய அரசு 2 கோடி பேருக்கு வேலை வழங்க 50 ஆயிரம் ஆண்டுகளாகும்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி:- காவல் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளோம். வருகிற செப்டம்பர் மாதம் 390 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து 800 பணியிடங்கள் நிரப்ப உள்ளோம். ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியிடங்களையும் நிரப்ப உள்ளோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com