

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் பா.ஜனதா உறுப்பினர்கள் முழு நேர கட்சிப் பணியாற்றி வருகிறார்கள். தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரை பற்றிய துண்டு பிரசுரம் நாடு முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
15 லட்சம் தொண்டர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மாநிலம் முழுவதும் 11 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் மட்டும் 900 பேர் துண்டு பிரசுரம் வினியோகம் செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பா.ஜனதா மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பா.ஜனதா ஒரு முதன்மையான கட்சியாக வளரும். திராவிட கட்சிகளின் காலம் தமிழகத்தில் முடிவுக்கு வந்து விட்டது. இனி பா.ஜனதாவின் காலம் தான்.
ஜி.எஸ்.டி. வரி மற்றும் மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பற்றி வேண்டுமென்றே பொய்யான தகவல்களை சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். இது பெரிய பிரச்சினையே அல்ல. ஒரு வாரம் பொய் சொல்லலாம், ஒரு மாதம் பொய் சொல்லலாம். எப்போதும் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. உண்மை எப்படியும் வெளியே வந்து விடும். ஜி.எஸ்.டி. அறிவிப்பால் விலைவாசி குறைந்துள்ளது.
தியேட்டர் ஊழியர்களின் போராட்டத்துக்கும், ஜி.எஸ்.டி.க்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தமிழக அரசின் உள்ளாட்சிக்கான கேளிக்கை வரியை கண்டித்து தான் தியேட்டர் உரிமையாளர்கள் போராடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.