

கும்பகோணம்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊரணிபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருடைய வீட்டில் இருந்த 6 ஐம்பொன் சிலைகளை அப்போது அருப்புக்கோட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த காதர்பாட்சா, ஏட்டு சுப்புராஜ் ஆகியோர் பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த சிலைகளை காதர்பாட்சாவும், சுப்புராஜூம் முறைப்படி கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை.
இதுதொடர்பாக ஆரோக்கியராஜ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே காதர்பாட்சா துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் அவரையும், சுப்புராஜையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதில் காதர்பாட்சா ஜாமீனில் வெளிவந்தார். அவர், தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி கும்பகோணம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கும்பகோணம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது.
இதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், காதர்பாட்சாவின் வக்கீல் ஆகியோர் ஆஜராகி தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி மாதவராமானுஜம் முன்பு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 9-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பொன்.மாணிக்கவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு காதர்பாட்சா தமிழக டி.ஜி.பி.யிடமும், கோர்ட்டிலும் அளித்த புகார் மனுக்களில், போலீசாரை இழிவுபடுத்தும் வகையில் போலீசார், கோர்ட்டில் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்துகின்றனர் என்று கூறி உள்ளார். நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட காதர்பாட்சாவின் புகார்கள் குறித்து நீதிபதி முன்பு விளக்கி உள்ளேன்.
எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி பதவிக்கான காலக்கெடு 2 மாதங்களில் முடிய உள்ளது. எனவே இந்த வழக்கை எப்படியாவது இழுத்தடிக்க பார்க்கிறார்கள். வழக்கில் முக்கியமான சாட்சியை கலைக்க பார்க்கிறார்கள். காதர்பாட்சா போலீஸ் துறையில் இருந்ததால் சாட்சியத்தை கலைத்து வழக்கை எப்படியெல்லாம் திசை திருப்ப முடியும் என்று தெரிந்தவர். இன்று கோர்ட்டுக்கு காதர்பாட்சா வரவில்லை. உடல்நிலை சரியில்லை என அவர் அளித்த மனுவையும் கோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.