சிலை கடத்தல் விசாரணைக்கு முட்டுக்கட்டை - பொன்மாணிக்கவேல் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு விசாரணைக்கு இடையூறு மற்றும் முட்டுக்கட்டை போடப்பட்டதாக சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
பொன்மாணிக்கவேல்
பொன்மாணிக்கவேல்
Published on

சென்னை:

சிலை கடத்தல் வழக்குகளில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோன்று தனது சிறப்பு அதிகாரி பதவிக்காலம் வருகிற 30-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளதால் கால நீட்டிப்பு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொன்மாணிக்கவேலும், அவருக்கு ஆதரவாக டிராபிக் ராமசாமியும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல் விவகாரத்தில் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பொன்மாணிக்கவேல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்மாணிக்கவேல் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது:-

எனது தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு விசாரணைக்கு பல்வேறு இடையூறு, முட்டுக்கட்டைகள் போடப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு என்னை சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவு பிறப்பித்த தேதியான 30.11.2018 முதல் தற்போது வரை சிலை கடத்தல் தொடர்பாக 3 வழக்குகள் பதியப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 4 பேருக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. 700 ஆண்டு பழமையான நடராஜர் பஞ்சலோக சிலை தென்னாப்பிரிக்காவில் இருந்தும், 16 சிலைகள் சிங்கப்பூரில் இருந்தும், 6 சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்தும், 9 சிலைகள் அமெரிக்காவில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொன்மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அதுவரை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள அவமதிப்பு வழக்கை விசாரிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசு தரப்பில் குறிப்பிட்டுள்ளது போன்று எந்த கருத்தையும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவிக்கவில்லை என பொன்மாணிக்கவேல் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

‘பொன்மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் பொன்மாணிக்கவேலின் பதிலுக்காகவே வழக்கை சுப்ரீம்கோர்ட்டு தள்ளிவைத்துள்ளது. வருகிற 30-ந்தேதியுடன் பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைவதால் அதன்பின்னர் அவரை பணியில் இருந்து விடுவிக்க அரசு முயற்சித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி ஐகோர்ட்டை அரசு மிரட்டி வருகிறது’ என டிராபிக் ராமசாமி தரப்பு வக்கீல் வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘பொன்மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து கடந்த ஆண்டு(2018) நவம்பர் 30-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், ஓராண்டு அல்லது அடுத்த உத்தரவை பிறப்பிக்கும் வரை சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நீடிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது பதவிக்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது பதவிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டை நாடலாம். பதவி நீட்டிப்பு மனுவை பொறுத்தவரை தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

இதன்பின்பு, அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை டிசம்பர் 6-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com