

லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதற்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 22-ம் தேதி நடைபெற்றது.
25 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், 26 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
94 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், எட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பா.ஜ.க மற்றும் பகுஜன் சமாஜ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
முதற்கட்ட தேர்தலின் போது சில வாக்குச்சாவடிகளில் எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு விழுந்தது என்ற சர்ச்சை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.