பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண சிபிசிஐடி போலீஸ் தீவிரம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யார்- யார்? என அடையாளம் காணும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். #PollachiCase #CBCID
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண சிபிசிஐடி போலீஸ் தீவிரம்
Published on

கோவை:

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி..ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட 3 பெண்களை அடையாளம் கண்டனர். ஆனைமலை, ஊட்டி, சென்னையை சேர்ந்த அவர்கள் 3 பேரிடமும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.

கும்பலால் பாதிக்கப்பட்டது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் புகார் அளிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யார்- யார்? என அடையாளம் காணும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே போலீசில் புகார் அளித்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (28) கடந்த 25-ந் தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அவரை 11 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்தனர். அதன் பேரில் 4 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 29-ந் தேதி முதல் மணிவண்ணனை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசை ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்திருந்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், பார் நாகராஜிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் மணிவண்ணனிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களுடன் மணிவண்ணனுக்கு எந்தெந்த வகைகளில் தொடர்பு இருந்தது? என்று விசாரணை நடத்தினர். மேலும், சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியான தன் பின்னணி தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினர்.

மணிவண்ணனின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைகிறது. அவரிடம் போதிய தகவல்கள் பெற்று விட்டதால் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

மணிவண்ணன் கூறிய தகவல்களின் அடிப்படையில் அவரது நண்பர்கள் சிலரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #PollachiCase #CBCID

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com