சிவாஜி சிலை அகற்றம்: இளங்கோவன், திருமாவளவன், சீமான் கண்டனம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை நள்ளிரவில் அகற்றியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிவாஜி சிலை அகற்றம்: இளங்கோவன், திருமாவளவன், சீமான் கண்டனம்
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே காமராஜரும், சிவாஜி கணேசனும்தான் என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனுக்கும் தெரியும். அந்த அப்பழுக்கற்ற நடிகர் திலகத்தின் சிலையை ஒதுக்குப்புறமாக மணிமண்டபத்துக்குள் வைப்பது கவுரவமாக இருக்காது.

சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அவரது படத்தை வைத்து கொண்டாடிய இப்போதைய தலைமைக்கு சிவாஜி கணேசனின் சிலை கடற்கரையில் உள்ள தலைவர்களின் சிலையின் வரிசையில் வைக்க நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

எம்.ஜி.ஆருக்கு காட்டிய ஆர்வத்தை காங்கிரஸ் தலைமை, காங்கிரசை வளர்த்த தலைவனுக்கு ஆர்வம் காட்டாதது நிச்சயமாக ஒவ்வொரு தொண்டனையும் வருத்தத்தில் ஆழ்த்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை நடு நிசியில் அகற்றி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. போக்குவரத்திற்கு இடையூறு என்று காரணம் காட்டி தொடரப்பட்ட வழக்கில் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டு இருப்பது வியப்பாக உள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாக எத்தனையோ ஆக்கிரமிப்புகள் சென்னையில் உள்ளன. குறிப்பாக சாலையின் நடுவே பல தலைவர்கள் சிலைகள் உள்ளன. அதே போல சிவாஜி கணேசன் சிலையும் சாலையின் நடுவே அமைந்துள்ளது.

அதன் அருகில் விடுதலை பொன் விழாவிற்கான நினைவு தூண் ஒன்று சாலையில் அமைத்து இருக்கிறார்கள். அதனால் போக்குவரத்து இடையூறு இல்லை. ஆனால் சிவாஜி சிலையால்தான் இடையூறு என்பது ஆச்சரியமாக உள்ளது.

அவருடைய சிலையை அப்புறப்படுத்தியவர்கள் அதே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து நிறுவி இருக்கலாம். ஆனால் அவரது மணிமண்டபத்திற்கு கொண்டுபோய் கிடத்தி இருக்கிறார்கள் என்பது அவரை அவமதிக்கும் செயலாகும்.

அவர் நடிகர்தான் என்றாலும் நாட்டுப்பற்று உள்ளவராக விளங்கினார். திரைப் படங்கள் மூலம் நாட்டுப் பற்று உணர்வை பொது மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார்.

அவருடைய சிலையை அவர் பெரிதும் மதித்த காந்தி, காமராஜர் சிலைகளுக்கு இடையில் மெரீனா கடற்கரையிலேயே வைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:-

நள்ளிரவில் நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய- மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் இரவில்தான் எடுப்பார்களா? பணமதிப்பு நீக்க நடவடிக்கை, வரிவிதிப்பு போன்றவை நள்ளிரவில் அமல்படுத்தப்பட்டது.

காந்தி இரவில் சுதந்திரம் வாங்கி கொடுத்தார் என்பதற்காக இதுபோன்று செயல்படுகிறார்களா?

நீதிமன்ற உத்தரவுப்படி சிவாஜி சிலை அகற்றப்படும் பட்சத்தில் அதனை மெரினா கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எத்தனையோ தலைவர்கள் சிலைகள் அங்கு இருக்கும் போது, சிவாஜி சிலையை மட்டும் வைக்க மறுப்பது ஏன்?

சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டது போல ஆட்சியும் நள்ளிரவில் அகற்றப்படும்.

சிவாஜி சிலையை மெரினாவில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றி இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றி இருக்கிறோம். மணி மண்டபத்தில் அதை வைப்போம் என்று கூறுகிறார்கள். சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று வழக்கு போட்டதும், அதற்கு ஆதரவாக அரசு செயல்பட்டதும் தவறு.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி கணேசன். அவரைப் பார்த்து தான் பலர் திரை உலகத்துக்கு வந்தார்கள். நடிப்பால் உலகப் புகழ் பெற்றவர். அவருக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கூட எந்த பெருமையும் செய்யவில்லை. செவாலியே என்ற பட்டத்தை கூட வெளிநாட்டுகாரன்தான் கொடுத்தான்.

சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றியது நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அவமானப்படுத்தும் செயல். இதற்கு தமிழர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். பெருமைப்படுத்தப்பட வேண்டிய ஒரு புகழ்பெற்ற தமிழனை இதுபோன்று அவமானப்படுத்தக் கூடாது. தமிழக அரசு, மத்திய அரசு சொல்லும் எதற்கும் தலையாட்டும் அரசாக இருக்கிறது. ஒரு நல்ல கலைஞனை பெருமைப்படுத்த தவறி விட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com