தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்திய போலீசாருக்கு தண்டனை வழங்க வேண்டும்- கலெக்டரிடம் மனு

குமரி மாவட்டத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த துணைநின்ற மாவட்ட கலெக்டர், மற்றும் துப்பாக்கியால் சுட்ட காவல்துறையினருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.#SterliteProtest
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு, கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் மனு கொடுக்க வந்தவர்க
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு, கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் மனு கொடுக்க வந்தவர்க
Published on

நாகர்கோவில்:

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது.

குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், குமரி மாவட்ட திருவருட்பேரவை பொதுச்செயலாளர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் உள்பட பலர் தூத்துக்குடி பிரச்சினை தொடர்பாக, குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுப்புகையினால் சுற்றுச்சூழல் மாசுபட்டு புற்றுநோய் போன்ற பல்வேறு உயிர்கொல்லும் நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிர்களை பலி கொடுத்து வரும் மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் 100-வது நாளில் நீதி கேட்டு பேரணியாகச் சென்ற வேளையில் காவல்துறை அத்துமீறி, வன்முறைத் தாக்குதல் நடத்தி எந்தவித முன் எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். சுமார் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

காவல்துறையின் இந்த வன்முறைத் தாக்குதல் மனிதநேயமுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

கொல்லப்பட்டவர்கள், காயம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமூக நீதி அடிப்படையில் தகுந்த இழப்பீட்டு தொகை மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கிட வேண்டும். வேறு பல மாநிலங்களில் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் கால் பதித்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படவேண்டும்.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் முரட்டுத்தனமாக துப்பாக்கி சூடு நடத்த துணைநின்ற மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் துப்பாக்கியால் சுட்ட காவல்துறை வீரர்கள் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். காணாமல் போன மக்களைக் கண்டறிந்து அவர்களை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ், குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ராஜ், குமரி மாவட்ட திருவருட்பேரவை ஒருங்கிணைப்பாளர் மரியவின்சென்ட், மரியவிக்டர், பங்கிராஸ், ஸ்டீபன், அகமது உசேன் ஆகியோர் உடன் சென்றனர். #SterliteProtest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com