

கோவை:
அரியலூர் மாணவி அனிதா தற்கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
கோவையில் கடந்த 4-ந்தேதி மாலை நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் காந்திபுரம் கிராஸ் கட் ரோடு சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது.
இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும் போலீஸ் தடையை மீறி மாணவர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் 40 பேரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
இந்தநிலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில் அத்துமீறும் போலீஸ் அதிகாரியின் கையை எஸ்.ஐ. தள்ளிவிடுவது போன்றும், மீண்டும் போலீஸ் அதிகாரி அத்துமீறுவது போன்றும் காட்சிகள் உள்ளன.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி கூறியதாவது:-
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
கோவையில் வேகமாக பரவும் வீடியோ காட்சிகள் மாதர் சங்கங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.