2-ம் நிலை காவலர் பணி தேர்வு: தனி நீதிபதி தடை ரத்து

இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான ஒட்டு மொத்த தேர்வு நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்திய குரூப்2ஏ, குரூப்4 தேர்வுகளில் நடந்த மிகப்பெரிய முறைகேடு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், 2-ம் நிலை காவலர் (போலீஸ்) தேர்விலும் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் உள்பட 15 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக காவல்துறையில் 2ம் நிலை காவலர்கள், சிறைத்துறை வார்டன்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் என்று மொத்தம் 8 ஆயிரத்து 888 பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.

இந்த தேர்வில் லட்சக்கணக்கான பேர் கலந்துக்கொண்டனர். இதன்படி நடந்த எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது.

இதையடுத்து, கடந்த 2-ந்தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தேர்ச்சி பட்டியலில் உள்ளவர்களில் சுமார் 1,019 பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 763 பேர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இந்த தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இந்த தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற ‘கட் ஆப்’ மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இட ஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை.

எனவே, இந்த தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்வில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. இந்த முறைகேடு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேட்டை விட மிகப்பெரிய முறைகேடாகும்.

போலீஸ் தேர்வில் நடந்துள்ள இந்த முறைகேட்டை தமிழக போலீசார் விசாரித்தால் நேர்மையாக இருக்காது. அதனால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் கடந்த மாதம் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த போலீஸ் பதவிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் 2 பேருடைய பெயரே இல்லை. ஆனால், இறுதி தேர்ச்சி பட்டியலில் அவர்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த தேர்வில் தேர்வாணையத்தின் அதிகாரிகளுடன் கூட்டுச்சேர்ந்து மிகப்பெரிய மோசடியை ஒரு கும்பல் செய்துள்ளது என்று மனுதாரர் வக்கீல் வாதிட்டார்.

தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடக்கிறது. இதனால் அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும்.

குறிப்பிட்ட பயிற்சி நிறுவனத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்படி போலீஸ் தேர்வில் தேர்வானார்கள்? அவர்களில் பலரில் எப்படி 69.5 என்ற ஒரே மதிப்பெண்களை பெற்றனர்? எழுத்து தேர்வு தேர்ச்சி பட்டியலில் இடம் பெறாத 2 பேரை உடல் தகுதி தேர்வில் எப்படி பங்கேற்க அனுமதித்தனர்?

இதுபோன்ற மோசடி நபர்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்ந்தால் காவல்துறை என்னவாகும்? தமிழர்கள் ஆகிய நாம் நேர்மையை இழந்து விட்டோம்.

எனவே, ‘இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான ஒட்டு மொத்த தேர்வு நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, போதுமான முகாந்திரம் இன்றி தேர்வுக்கு தனி நீதிபதி தடை விதித்து விட்டதாக வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் தனி நீதிபதி விதித்த தடையை ரத்து செய்வதாகவும், தனி நீதிபதி முன்புள்ள ரிட் வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com