

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 பேரும் இந்தியாவின் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்தனர்.
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு உச்சக்கட்டப் போர் வெடித்தபோது அங்குள்ள மோசூல் நகரை விட்டு வெளியேற முயன்ற 40 இந்தியர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
அவர்களை மீட்க இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், கடத்தப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் உயிருடன் தப்பி வந்தார். மீதி 39 பேரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த மாதம் 20-ம் தேதி பாராளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் 38 பேரின் டி.என்.ஏ. காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்திருந்தது. ஒருவரின் டி.என்.ஏ. 70 சதவீதம் மட்டுமே ஒத்துப் போனதால் அவரது உடலை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
உரிய நடைமுறைகளுக்கு பின்னர் டி.என்.ஏ. மாதிரி 70 சதவீதம் மட்டுமே ஒத்துள்ள ஒரு இந்தியரை தவிர மீதமுள்ள 38 இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.