காதலனை விரட்டிவிட்டு பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்
தஞ்சாவூர்:
தஞ்சையை சேர்ந்தவர் கருப்பையன் மகன் மணிமாறன் (வயது 18). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் பக்கத்து தெருவில் உள்ள ஒரு 16 வயது மாணவியை காதலித்து வந்தார். அந்த மாணவியும் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தஞ்சை புது ஆற்றங்கரை நெய்தல் வாய்க்கால் பகுதி அருகே மணிமாறன் அந்த மாணவியை அழைத்து சென்று இருவரும் தனியாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக தஞ்சை ரெகுநாதபுரம் பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் கார்த்தி (20). அவரது அண்ணன் இளவரசன் (22) ஆகியோர் அங்கு வந்துள்ளனர். தனியாக மணிமாறனும், அந்த மாணவியும் நின்று பேசிக்கொண்டிருந்ததை பார்த்த அவர்கள் அங்கு சென்று மணிமாறனை மிரட்டியுள்ளனர்.
பின்னர் மணிமாறனை அங்கிருந்து விரட்டி விட்டு அந்த மாணவியை 2 பேரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அவர்களுடைய நண்பர்களான மற்றொரு இளவரசன் (26), ரவிச்சந்திரன் என்ற சோனி (36), செல்வம் (19), நடராஜன் (20) ஆகிய 4 பேரையும் அழைத்துள்ளனர். அவர்களும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி சத்தம் போட்டுள்ளார். உடனே அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சூழ்ந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த மாணவியை மீட்டனர்.
பின்னர் கார்த்தி, இளவரசன், மற்றொரு இளவரசன், ரவிச்சந்திரன், செல்வம், நடராஜன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அந்த மாணவியின் காதலனான மணிமாறனை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

