நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவுகளை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

முன்னாள் நீதிபதி கர்ணன் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவுகளை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
Published on

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை மதிக்காமல் நடந்துகொண்டதால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது.

பணியில் இருந்து ஓய்வுபெற்ற சி.எஸ்.கர்ணன் இந்த உத்தரவைத் தொடர்ந்து தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். கர்ணன் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் சி.எஸ்.கர்ணன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வக்கீல் மாத்யூஸ் நெடும்பரா ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விதிகள் அரசியலமைப்பின்படி தான் உள்ளதா? என கேள்வி எழுப்பி இருந்தார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஜிதா மிட்டல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முதலில் இது நோட்டீஸ் வழங்கப்பட வேண்டிய வழக்குதானா என்பதில் நாங்கள் திருப்தி அடைய வேண்டும். எனவே இதில் நோட்டீஸ் அனுப்ப முடியாது என்று மறுத்தனர்.

கர்ணன் மீது சுப்ரீம் கோர்ட்டு விதித்த உத்தரவுகள் அனைத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக வக்கீல் நெடும்பரா வாதாடும்போது, நீதிபதி என்பவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். எனவே பாராளுமன்றத்தால் மட்டும் தான் அவரை நீக்க முடியும் என்றார்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரலாம் என்று ஒரு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக அவர் கூறியதை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com