

புதுச்சேரி:
மத்திய அரசை கண்டித்தும், தலித் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க கோரியும் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் புதுவை புதிய பஸ் நிலையம் அருகே நேற்று இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
இரவு 7.40 மணியளவில் கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது மேடையின் பின்புறம் இருந்த ஒரு வாலிபர் திடீரென கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை மேடையை நோக்கி வீசினார்.
இதில், மேடையில் இருந்த பேனரில் பெட்ரோல் வெடிகுண்டு விழுந்து தீப்பிடித்தது. இதனை பார்த்ததும் கூட்டத்துக்கு வந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் இதனால் அங்கு பதட்டம் உருவானது. உடனடியாக பொதுக்கூட்டம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை தி.மு.க.வினர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த வேல்முருகன் (வயது 34) என்பதும், கடந்த சில மாதங்களாக புதுவையில் தங்கி ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் குடிபோதையில் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி துணியால் திரி போட்டு வெடிகுண்டாக தயாரித்து மேடையில் வீசியது தெரிந்தது.
இதையடுத்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் பொதுக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.