கோவையில் பா.ஜனதா மாவட்ட தலைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கோவையில் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசி கார் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் பா.ஜனதா மாவட்ட தலைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
Published on

கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக இருப்பவர் சி.ஆர். நந்தகுமார் (48). இவரது வீடு கோவை சிங்காநல்லூர் மசக்காளி பாளையம் ரோடு பாலன் நகரில் அமைந்துள்ளது. இவர் தனது இனோவா காரை வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்தி இருந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை நந்தகுமார் வீடு மீது வீசினர். இதில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த அவரது கார் குபுகுபுவென தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டதும் நந்தகுமார் எழுந்து வெளியே வந்தார். இதனை பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் தீப்பிடித்து எரிந்த காரை நந்தகுமார் தண்ணீர் ஊற்றி அணைத்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கும், பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரை மணிநேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.

சம்பவ இடத்திற்கு கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, துணை கமி‌ஷனர் லட்சுமி, உதவி கமி‌ஷனர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட காரை பார்வையிட்டனர்.

நந்தகுமார் வீட்டில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் ஹெல்மெட் அணிந்த படி வரும் காட்சி பதிவாகி உள்ளது.

அவர்களில் ஒருவர் நந்தகுமார் வீட்டின் சற்று தூரத்தில் நிற்பதும் மற்ற 2 பேர் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது. கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் கடந்த 7-ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அலுவலகத்தின் சுவரில் பட்டு பெட்ரோல் குண்டு வெடித்தது.

இந்த சம்பவத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பாலன், ஜீவா, அவரது நண்பர் கவுதம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது வேலூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும் பெரியார் சிலை குறித்து பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும் பாரதிய ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசி கார் எரிந்த சம்பவம் கோவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் உமாபதி (51). பைனான்ஸ் அதிபர். இன்று அதிகாலை 3 மணியளவில் இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இவரது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி விட்டு தீப்பந்தத்தை கொளுத்தி போட்டனர்.

இதில் காரின் பின் பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதம்அடைந்தது. பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் சி.ஆர். நந்தகுமார் வீட்டின் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நடைபெற்ற சற்று நேரத்தில் பைனான்ஸ் அதிபர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் வீசி தீ வைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று உள்ளது.

இந்த இரு சம்பவத்திலும் ஒரே நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com