பொருளாதார வீழ்ச்சியை மறைக்க குடியுரிமை சட்ட திருத்த மசோதா - பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு

மத்திய அரசு சந்தித்துவரும் பொருளாதார வீழ்ச்சியை மறைக்க குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படுவதாக பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்
Published on

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியா வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை 2016-ம் ஆண்டு பா.ஜனதா அரசு கொண்டு வந்தது.

இந்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படாததால் காலாவதியாகிவிட்டது. எனவே புதிதாக சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, பாராளுமன்றத்தில் இன்று குடியுரிமை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை விமர்சனம் செய்து வருகின்றன.

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மத்திய பா.ஜனதா அரசு நிறைவேற்றுவது ஏன்? என்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில், குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் அரசியல், சமூக பொருளாதார நன்மை எதுவும் கிடைக்கப்போவது இல்லை. இது அரசியல் அடித்தளத்தை அசைக்கும் வி‌ஷயம்.

இந்த திருத்தத்தை நிறைவேற்றினால், அனைவரும் இந்த நாட்டின் குடிமகன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதால் மக்களிடம் அச்சம், பதட்டம் ஏற்படும். அரசியல்வாதிகள், ஊடகங்களின் விமர்சனத்துக்கு உள்ளாகும்.

தற்போது மத்திய பா. ஜனதா அரசு எல்லா முனைகளிலும் தோற்றுவிட்டது. பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. வேலை வாய்ப்பு குறைந்து விட்டது.

தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. ஜி.எஸ்.டி. பங்குத்தொகை கிடைக்காததால், மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உருவாகி வருகிறது.

ரிசர்வ் வங்கியின் இருப்பு தொகையில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு எடுத்தது. அதை மக்களுக்கோ, மாநில அரசுக்கோ கொடுக்கவில்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கிறது. இதனால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இந்த சிக்கலை சமாளிக்க மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை இரண்டு மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது நடந்தால் மத்தியஅரசு மக்களிடம் பெரும் எதிர்ப்பை சந்திக்கும் நிலை ஏற்படும். மக்கள் போராட்டங்கள் ஏற்படலாம்.

மத்திய அரசின் பொருளாதார தோல்வியை அரசியல் கட்சிகள் அதிகமாக விமர்சனம் செய்யும். இதனால் மத்திய பா.ஜனதா அரசின் செல்வாக்கு சரியும்.

இதை திசை திருப்புவதற்காகவே குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக தேவையற்ற ஒரு கற்பனையை உருவாக்கி, மோதலை ஏற்படுத்தும் வகையில் மத்திய பா.ஜனதா அரசுசெயல்படுகிறது. இதன் மூலம் மக்களையும், அரசியல் கட்சிகளையும் திசை திருப்ப திட்டமிட்டு செயல்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com