

பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள அரவட்லா மலை கிராமத்தில் ஒரு கும்பல் ஐம்பொன் சாமி சிலைகளை கடத்தி விற்க போவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, 3 நாட்கள் முன்பு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் அரவட்லா கிராமத்திற்கு வந்தார். அவரது தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கிராமத்தை ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, ஐம்பொன் சிலைகளை விற்க போவதை உறுதி செய்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் மற்றும் போலீசார் மாறுவேடத்தில் கடத்தல் கும்பலை அணுகினர். சிலை கடத்தல் கும்பலிடம் சாமி சிலைகளை விலைக்கு வாங்க வந்தவர்களை போல் பேசினர்.
பின்னர் வருவதாக கூறிவிட்டு ஐ.ஜி. தலைமையிலான போலீசார் அங்கிருந்து திரும்பினர். இந்த நிலையில் நேற்று மதியம் பங்களாமேடு வன ஓய்வு விடுதி அருகில் பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து காரில் மாறுவேடத்தில் துப்பாக்கியுடன் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் பதுங்கி இருந்தனர்.
ஏற்கனவே பேசிய கடத்தல் கும்பலிடம் போனில் பேசிய போலீசார் ஐம்பொன் சிலைகளை வாங்க வந்திருப்பதாக கூறி பங்களாமேடு பகுதிக்கு வருமாறு அழைத்தனர். ஒரு காரில் சிலர் வந்தனர். அவர்கள், இவர்களை பார்த்ததும் போலீசார் என கருதி காரை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
ஐ.ஜி. தலைமையில் போலீசார் சினிமா பாணியில் துரத்தினர். அப்போது அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 50) என்பவர் சிக்கி கொண்டார். மற்றொருவர் பங்களாமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் குளியலறை வழியாக குதித்து வீட்டிற்குள் பதுங்கினார்.
போலீசார் அந்த வீட்டில் நுழைந்தனர். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விவரத்தை கூறியதை தொடர்ந்து வீட்டிற்குள் பதுங்கியவரை பிடித்தனர். விசாரணையில் அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (38) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காரின் முன்பக்க கண்ணாடியை போலீசார் உடைத்து அதில் இருந்த ஐம்பொன்னால் ஆன முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய 3 சாமி சிலைகளை மீட்டு ஈஸ்வரன், ஆறுமுகம் ஆகிய 2 பேரைகைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிலை கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்த, அகரம் சேரியை சேர்ந்த குருசாமி (27) என்ற வாலிபரையும் நள்ளிரவில் கைது செய்தனர்.
மேலும், தப்பி ஓடிய 5 பேரை பிடிக்க தனிப்படை தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்த சிலை கடத்தல் விவகாரத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.