பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் புள்ளிமானை வெட்டி கறிசமைக்க முயன்ற 3 பேர் கைது

பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் புள்ளிமானை வெட்டி கறிசமைக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கவுண்டம்பாளையம்:

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வனப்பகுதிக்குள் அசம் பாவிதம் நடைபெறாமல் இருக்க பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குட்பட்ட பகுதியில் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் இரவு பகல் பாராமல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணி முடித்து வரும்போது, திருமாலூர் பகுதியில் சிலர் புள்ளி மானை கறி சமைப்பதற்காக வெட்டி கொண்டிருந்தனர். இதை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை குப்புராஜ் (வயது 52), ஜெயக்குமார் (26), ஈஸ்வரன் (60) என்பதும், காட்டுப்பகுதியில் இருந்து வந்த புள்ளி மானை நாய்கள் கடித்து கொன்று விட்டது. அதனால் அதை கொண்டு வந்து சமைக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் இந்த தகவலை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் தெபாசிஸ் ஜனா, கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ஆகியோருக்கு தெரிவித்தனர். அவர்கள் உத்தரவின்படி, வன உயிரின சட்டப்படி புள்ளி மானை வெட்டி சமைக்க முயன்ற 3 பேரையும் கைது செய்தனர். 3 பேருக்கும் தலா 20 ஆயிரம் வீதம் மொத்தம் 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com