

கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கீழ் மலை பகுதியில் பெய்த மழையால் கொடைக்கானல் - பழனி சாலையில் வடகவுஞ்சி அருகே பாறைகள் சாலையில் உருண்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. மேல்மலை பகுதிகளான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியின் முழு கொள்ளளவு 36 அடி. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இந்த ஏரி 4 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பியது. இந்த தண்ணீர் நிரம்பி டோபிகானா, எம்.ஜி.ஆர். நகர், ஆத்துமேடு, வெள்ளிநீர் வீழ்ச்சி, பேத்துப்பாறை, அஞ்சுவீடு, பெருமாள் மலை வழியாக பழனி சண்முகா நதிக்கு செல்லும்.
இதற்காக பொது மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏரி நிரம்பியதையடுத்து மதகை திறக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததால் பொதுமக்களே பாதுகாப்பு கருதி மதகுகளை நேற்று இரவு திறந்து விட்டனர். இதனால் அதிக அளவு தண்ணீர் வெளியேறியது.
இதனையடுத்து அப்பகுதிக்கு நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். பின்பு குறிப்பிட்ட அளவு தண்ணீரை திறந்து விடும்படி மதகு கதவுகளை திறந்து வைத்து பூட்டி சென்றனர். பொதுமக்களே தண்ணீரை திறந்து விட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.