செங்கல்பட்டில் இருந்து பயணிகள் பராமரிப்பு பணிக்காக ரெயிலில் தண்ணீர் வந்தது

பயணிகள் பராமரிப்பு பணிக்காக செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 4.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து பயணிகள் பராமரிப்பு பணிக்காக ரெயிலில் தண்ணீர் வந்தது
Published on

சென்னை:

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது.

நிலத்தடி நீர் மற்றும் நீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளில் நீர் இல்லாத காரணத்தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதே நிலைதான் தென்னக ரெயில்வே நிலையத்துக்கும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெரம்பூர் மற்றும் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையம் என 2 ரெயில் நிலையங்கள் உள்ளன. அங்கு வரும் ரெயில்கள் மற்றும் அதில் பயணம் செய்யும் பயணிகளின் பராமரிப்பு பணிகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

பேசின்பாலம் பணிமனையில் தினமும் 300 முதல் 320 ரெயில்கள் பராமரிக்கப்படுகின்றன. இதற்கு நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீரும், எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளின் தேவைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.

ஆனால் பேசின்பாலம் பணிமனை அருகே உள்ள பேசின்பாலம், பெரியமேடு, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் இல்லை. எனவே பேசின்பாலம் பணிமனை, எம்.ஜி.ஆர். சென்டரல் நிலையத்துக்கு தேவையான தண்ணீருக்கு மெட்ரோ வாட்டர் மற்றும் தனியார் லாரிகளையே எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

திருவொற்றியூரில் உள்ள டேங்குகளில் இருந்து மெட்ரோ வாட்டர் பெறப்படுகிறது. பேசின்பாலம் பகுதியில் உள்ள மறு சுழற்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 3.5 லிட்டர் நீரையே ரெயில் பெட்டிகள் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் ரெயில் பெட்டி களில் நிரப்ப போதுமான தண்ணீர் இல்லை.

எனவே செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 4.5 லட்சம் லிட்டர் தண்ணீர் நேற்று கொண்டு வரப்பட்டது. அங்குள்ள ஆழ் குழாய் கிணறுகளில் இருந்து 20 பிளாஸ்டிக் டேங்குகளில் நிரப்பப்பட்டு 10 பெட்டிகள் மூலம் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது.

இந்த தகவலை தென்னக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் ரெயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் 450 முதல் 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 டேங்குகள் உள்ளன.

இவை அனைத்தையும் நிரப்ப ரெயில் ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். முடிந்தவரை ரெயில் புறப்படும் இடங்களிலேயே தண்ணீரை நிரப்பிவிடுகிறோம். முடியாத நிலையில் அடுத்த நிலையத்தில் நீரை நிரப்புகிறோம்.

தண்ணீர் பற்றாக்குறை இருந்த போதிலும் தேவையான தண்ணீரை வழங்க முயற்சி செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com