

பனாஜி:
கோவாவில் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இதனையடுத்து இந்திய பாதுகாப்பு மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் தனது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல் மந்திரியாக கடந்த மார்ச் 14ம் தேதி பதவியேற்றார்.
சட்டமன்ற உறுப்பினராக ஆறு மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் பனாஜி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. அவருக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக உள்ள பனாஜி தொகுதிக்கும், வால்பொய் தொகுதிக்கும் வருகிற 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. பனாஜி தொகுதியில் பா.ஜ.க. சார்பாக பாரிக்கர் போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்திருந்தது.
இதையடுத்து, மனோகர் பாரிக்கர் இன்று பனாஜி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 28ம் தேதி எணணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 1994 முதல் 2014ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பனாஜி தொகுதியில் இருந்து மனோகர் பாரிக்கர் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.