

பரமக்குடி:
பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மகன் முத்துக்குமார் (வயது 27). சென்னையில் வேலை பார்த்து வந்தார்.
மகா சிவராத்திரி நாளில் குலதெய்வம் கோவில் வழிபாட்டில் பங்கேற்பதற்காக முத்துக்குமார் ஊருக்கு வந்தார்.
நேற்று இரவு கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் இன்று காலை ஊருக்கு புறப்பட்டார்.
ராமநாதபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரியநேந்தல் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வந்த கல்லூரி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர் அருகே உள்ள செட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் ஜோதிகுமார் (32). இவர் தனது நண்பர் அழகு ராஜாவுடன் பூந்தமங்கலத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை காணச் சென்றார்.
நள்ளிரவில் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தபோது 4 வழிச்சாலையில் தும்பைப்பட்டி பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் ஜோதிகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். அழகுராஜா காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.