

ஜம்மு:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று காலை 8.30 மணியில் இருந்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.
இந்திய வீரர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்த ஆண்டில் ஜனவரி மாதம் தொடங்கி காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்தியுள்ள சுமார் 650 தாக்குதல்களில் 15 ராணுவ வீரர்கள் உள்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். #tamilnews #Pakistanviolates