இந்திய மீனவர்கள் 145 பேரை விடுதலை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு

குல்பூஷன் ஜாதவ் குடும்பத்தாருக்கு இஸ்லாமாபாத் நகரில் இழைக்கப்பட்ட அவமரியாதைக்கு இடையில் நல்லெண்ண அடிப்படையில் 145 இந்திய மீனவர்களை விடுதலை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இஸ்லாமாபாத்:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மற்றும் இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

அவ்வகையில், கடந்த ஒருமாத காலத்தில் மட்டும் 114 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். இந்த ஆண்டில் பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை சுமார் 400 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் 145 இந்திய மீனவர்களை சிறைகளில் இருந்து விடுதலை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, பல்வேறு சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள் கராச்சி நகரில் இருந்து லாகூருக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். லாகூரில் இருந்து வாகா எல்லைப்பகுதிக்கு அழைத்து செல்லப்படும் மீனவர்கள் அங்குள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

முன்னதாக, கடந்த வாரம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த ஒரு அறிவிப்பில் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததற்காக கைதான 291 இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று 145 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 146 இந்திய மீனவர்கள் வரும் ஜனவரி 8-ம் தேதிக்குள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com