

இஸ்லாமாபாத்:
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் நிகழ்ந்து வருவதாக பாகிஸ்தான் புகார் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இந்திய உளவு நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டிவரும் பாகிஸ்தான், இந்த தாக்குதல்களுக்கு இந்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறி வருகிறது.
எனவே இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தங்கள் நாட்டு தூதரை இஸ்லாமாபாத்துக்கு அழைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சொகைல் மக்முத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் நேற்று தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டு தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக எந்த எல்லைக்கும் பாகிஸ்தான் செல்லும் என்று கூறிய அவர், இந்த பிராந்தியத்தில் அமைதியையே பாகிஸ்தான் எப்போதும் விரும்புவதாக தெரிவித்தார்.
முன்னதாக இந்த விவகாரத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. #Tamilnews